கூலி தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாரமேடு பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான யூசுப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் யூசுப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான நாசர் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் டி.கே மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த போது தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு நாசர் யூசுப்பிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யூசுப் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிகிச்சை முடிந்த பிறகு நாசரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.