பேருந்திலிருந்து கீழே குதித்ததால் சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சினிகிரிபள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நவ்யா ஸ்ரீ உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவ்யா ஸ்ரீ பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். குமார் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து சினிகிரிபள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவுடன் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்த மாணவி இறங்குவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் அச்சத்தில் நவ்யா ஸ்ரீ முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே குதித்துவிட்டார். இதனால் கீழே விழுந்த மாணவியின் மீது பேருந்தின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியதால் கை, கால் நசுங்கி நவ்யா உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் கண்டக்டரை கைது செய்துள்ளனர். மேலும் தர்மபுரி மண்டல போக்குவரத்து துறை பொது மேலாளர் ஜீவரத்தினம் வெங்கடேசன் மற்றும் குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.