வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 650 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அனுமதிக்க மாவட்ட ஆட்சியரிடம் முறையிட பாலமேடு ஜல்லிக்கட்டு குழு முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விழாவானது, பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியன்றும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியன்றும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் மட்டுமே பங்குபெற வேண்டும் எனவும், முதல் பரிசாக கார், டூவிலர், நாட்டு இனக் கறவை மாடுகள் போன்றவை பரிசாக வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து பேசிய பாலமேடு கிராம கமிட்டியின் பொருளாளர் மனோகரவேல் பாண்டியன், ” சென்ற முறை 1200 டோக்கன் கொடுக்கப்பட்டதால்தான் அதிக காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு கொள்ளாமல் போனது. இந்த முறை 650 டோக்கன்கள் மட்டுமே கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கு பெறாமல் இருப்பது தடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் வழக்கமாக போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரையில் நடைபெறும். இந்த முறை கூடுதலாக 1 மணி நேரம் வழங்கக் கோரியும் பாலமேடு ஜல்லிக்கட்டு குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.