போதை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து நிலம்பூர் நோக்கி வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் அன்ஷாத், முர்ஷித், ராஷித் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கூடலூரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் சிலரிடமிருந்து அதனை வாங்கி வந்ததாக மூவரும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக நீலகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமாரின் உத்தரவின் படி காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனை செய்த ஷபீன், அதனை வாங்கிய ஷாரிப், பீட்டர், பிரேம் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதை பொருட்களை விற்பனை செய்த ஷபீன் ஒரு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.