காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் வேரோடு சாய்ந்ததால் உட்கார்ந்த நிலையிலேயே காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டவராயன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து காவலாளியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஒரு மரத்திற்கு அடியில் உட்கார்ந்து சமையல் பாத்திரங்களை கழுவியுள்ளார். அப்போது பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அந்த மரம் வேரோடு சாய்ந்து கருப்பசாமியின் மீது விழுந்ததால் உட்கார்ந்த நிலையிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கருப்பசாமி இறந்தது யாருக்கும் தெரியவில்லை.
இதனை அடுத்து மறுநாள் காலை இடத்தின் உரிமையாளர் கருப்புசாமி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.