குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு முக ஸ்டாலின் குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றது.
இந்தநிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மசோதாவை ஆதரித்து வாக்களித்த அதிமுகவை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கோசம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பது தான் குடியுரிமையா? என்று கேட்டார். குடியுரிமை என கூறி குடி மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியது குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வருவோரிடம் விஷத்தை கலக்குகிறார்கள்.நாட்டை குட்டிச் சுவராக்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எதையும் செய்யாத எதையும் சொல்ல முடியாத ஆட்சி மத்தியில் நடக்கிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இலங்கை தழிழர்களுக்கும் நாங்கள் எதிரி என்று பாஜக நிரூபித்துள்ளது என்று பேசினார்.