இஸ்ரேலில் பயிற்சிக்காக சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹபா என்ற துறைமுக நகரத்திலிருந்து, நாட்டின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர் வழக்கமாக நடைபெறும் பயிற்சியை மேற்கொண்டது. அப்போது, ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள், வான் கண்காணிப்பாளர் ஒருவர் பயணித்தனர்.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடற்படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வான் கண்காணிப்பாளர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் தற்போது தெரியவில்லை. இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ள கடற்படை உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.