தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அதாவது இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1,575 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இடங்களுக்கான பாடவாரியாக பள்ளிகளின் பட்டியல்கள் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களால் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை அனுப்பி பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அந்தந்த பள்ளிகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அந்த குறிப்பிட்ட பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தேவைதானா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அனைத்து மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.