காளை விடும் விழா நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து காளை விடும் விழா நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் சி.என். அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ-க்களான அ.செ. வில்வநாதன், நல்லதம்பி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் காளை விடும் விழா நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும், விண்ணப்பித்தவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட அளவிலான ஒரு குழுவும் மற்றும் வட்ட அளவிலான ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். பின்னர் கொரோனா நெறிமுறைகளான முககவசம் அனைவரும் அணியுமாறும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டுமாறும் மற்றும் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.