நிர்பயா வழக்கில் அக்ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார்.
நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடப்பதாக இருந்தது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
இதில், அக்ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அக்ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அக்ஷய் குமாரின் மனுவில் அரசை கேலி செய்வதைப் போல குறிப்பிட்டிருந்தார். அதில், காற்று மாசுபாட்டால் பெரும்பான்மை மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களை ஏன் தூக்கிலிட வேண்டும் என்ற நக்கல் தொனியில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நிர்பயா வழக்கில் சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். மேலும் டெல்லியில் நாளை காலை 10 : 30 மணிக்கு வேறு அமர்வில் சீராய்வு மனு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.