டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏடிஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை கொசு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல் பரவுவதாக தெரிவித்தார். மேலும் குழந்தைகளை கொசு கடிக்காதவாறு பெற்றோர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். தூங்கும் குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க கட்டாயமாக கொசுவலை உபயோகப்படுத்த வேண்டும் எனவும், டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட கொசுக்கள் முட்டையிட அதிக வாய்ப்புள்ள இடங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.