அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹசனில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு விடுதி, உணவு, கார் என அனைத்தையும் வழங்கி அவருக்கு உடந்தையாக இருந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் குற்றமற்றவர் என விரைவில் நிரூபிப்பார் என்று கூறியிருந்தார். எனவே ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த இடம் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும், அவருக்கு உதவியாக இருந்த பாஜக கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது கூடுதல் சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அண்ணாமலைக்கு கர்நாடகத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஏனென்றால் அண்ணாமலை கடந்த 2018-ஆம் ஆண்டு வரை ஹசன் மாவட்டத்துக்கு அருகில் உள்ள சிக்மங்களூரு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். எனவே அரசியல் விமர்சகர்கள் தற்போது அதனை சுட்டிக்காட்டி வருகின்றனர்.