செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற வரிகளின் பங்கு தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து கிடைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பது நம் முத்தமிழ் முதல்வர் உடைய தாரகமந்திரம். அந்த வகையிலே நல்லவைகளுக்கு நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கைகொடுப்பார்கள், அல்லவை என்றால் அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார்.
பாஜகவின் மாநில தலைவரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பணிகளுக்கு உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னெடுத்து வைக்கின்ற பல்வேறு பணிகளுக்கு நீதிமன்றங்களுக்கு செல்பவர் யாரென்று பார்த்தால் பாஜக கட்சியை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். ஆகவே நடக்கின்ற நலத்திட்ட பணிகளுக்கு தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும் என்று உங்களின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன்.
இது ஆன்மீக பூமி என்பார்கள், ஒருபுறம் திராவிட மண் என்பார்கள், எது எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுசேர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிளவு இல்லாமல், எந்த விதமான சச்சரவு இல்லாமல் அரவணைத்து அழைத்துச் செல்ல முற்படுகின்றார். அவருடைய இந்த சீரிய நோக்கத்திற்கு அனைத்துக் கட்சியினரும்…. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.