தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சபரி பனியன் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சபரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இந்நிலையில் சபரி சத்தம் போட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை மறித்து இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பூர் பகுதியில் வசிக்கும் சஞ்சய் மற்றும் 17 வயது சிறுவன் என்பது காவல்துறையினருக்கு தெரிய தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.