பூமிக்குள் வைக்கப்பட்ட நவதானிய காளியம்மன் சிலை 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் மார்க்கெட் குமரன் தெருவில் 250 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவதானியம், மூலிகை மற்றும் அத்திமரத்தூள் ஆகியவற்றால் செய்த காளியம்மன் சிலையை வழிபட்டு வந்துள்ளனர். இது நவதானியத்தால் உருவான சிலை என்பதால் அபிஷேகம் செய்ய இயலவில்லை. இதனால் சிலர் நவதானிய சிலையை கருவறைக்கு கீழே பூமிக்குள் புதைத்து விட்டனர். அதற்கு மேல் கல் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு சிவனடியார் உள்பட 3 பேரின் கனவில் காளியம்மன் தோன்றி கருவறையில் பூமிக்குள் இருக்கும் தன்னை வெளியே எடுத்து வழிபடுமாறு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அறிந்ததும் கோவில் நிர்வாகிகள் காளியம்மனிடம் பூ போட்டு குறி கேட்டுள்ளனர். அதில் உத்தரவு கிடைத்ததால் யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் வைத்த நவதானிய சிலையை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதனை அடுத்து சிதிலம் அடையாமல் அப்படியே இருந்த நவதானிய சிலையை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்து அம்மனை வழிபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் பழமையான காளியம்மன் சிலையை ஆர்வமுடன் வந்து பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.