முறையாக நுழைவு வரி செலுத்தாத பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் நிறுத்தி முறையான ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்த போது நுழைவு வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பேருந்தை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் நுழைவு வரி செலுத்தாத பேருந்தின் உரிமையாளருக்கு 40 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆம்னி பேருந்தில் பயணம் செய்த குஜராத் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளன. இதில் பெண் பயணிகள் அதிகமாக இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அபராத தொகையை செலுத்திய பிறகு காலை 10.30 மணி அளவில் பயணிகளோடு பேருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது.