கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து 12 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 12 பேரையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து 15 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கபட்டிருந்த 12 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதனைதொடர்ந்து விசாரித்த நீதிபதி 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இலங்கை யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 56 ராமேஸ்வரம் மீனவர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.