கால்நடை மருந்தை சப்பிட்ட 8 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் சிவமணி உள்பட 8 சிறுவர்கள் காமராஜர் நகர் பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருள் கீழே கொட்டி கிடந்ததை பார்த்த அவர்கள் அதை போட்டி போட்டு அள்ளி சாப்பிட்டுள்ளனர். அதன்பின் சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் சாலையோரம் கொட்டிக் கிடந்த பொருள் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கான தடுப்பு மருந்து பொட்டாசியம் மேக்னைட் என்பதும், அது பார்ப்பதற்கு சர்க்கரை போன்று இருந்ததால் அதை சிறுவர்கள் அள்ளி தின்றதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதி சாலையோரத்தில் கால்நடை மருந்து கொட்டி கிடந்தற்கான காரணம் பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.