வங்கி உதவி மேலாளர் என கூறி பணத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை கிராமத்தில் வசந்தி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நகையை அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் வசந்தியிடம் சென்று நான் வங்கியின் உதவி மேலாளர் குமார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து நகை மீதான வட்டியை குறைப்பதாக கூறி வசந்தியிடம் இருந்து பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய வசந்தி நகை ரசீது மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து அந்த நபர் வசந்தியிடம் தபால் அலுவலகத்திற்கு சென்று வட்டி தள்ளுபடி விண்ணப்பம் வாங்கி வருமாறு கூறி அவரை அனுப்பிவிட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் வங்கிக்கு மீண்டும் திரும்பிய வசந்தி அந்த நபர் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தது உடனடியாக ஆர்.எஸ். மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். மேலும் அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபரை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் ஏர்வாடி பகுதியில் இருப்பது தெரியவந்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்மநபரை மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் சிவகங்கை மாவட்டம் நேரு நகரில் வசிக்கும் மீரான் மைதீன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வசந்திடம் ஏமாற்றியது போல் பரமக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரிடம் இருந்தும் 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.