மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த நெற்பயிருக்கு 30,000 ரூபாய் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதனை அடுத்து நிர்வாகிகள் ராமச்சந்திரன், கற்பனை செல்வம், மகாலிங்கம், ரமேஷ் பாபு மற்றும் செல்லையா, ஜோதி, ஜெகதீசன், ஜெயக்குமார் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால் இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததினால் பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளது. மேலும் இதற்கிடையில் மாவட்ட காவல்துறை சக்தி கணேசன் அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி கூறியுள்ளார். இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அங்கேயே அமர்ந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.