Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோளாறு…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்ற ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் கார்டில் பெயர் நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பாக தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து நெல்லிக்குப்பம் பகுதியில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் கடந்த சில தினங்களாக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் சேவை மையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஆதார் திருத்தப் பணிகள் தொடர்பாக அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் சேவை மைய ஊழியரிடம் கேட்ட போது அவர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த மற்ற ஊழியர்கள், இது பற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறியுள்ளனர். மேலும் இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |