Categories
அரசியல்

‘பாவத்த சம்பாதிப்பீங்க…. அதான் ஆட்சி போயிடுச்சே’….. சட்டப்பேரவையில் ஸ்டாலின் VS ஈபிஎஸ் காரசார விவாதம்….!!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையில் கடும் விவாதம் நடந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் என்ன? நீங்கள் கருணாநிதி பெயரிலான எத்தனை திட்டங்களை நிறுத்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். உடனே, அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான பாவத்தை அனுபவிப்பீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள் என்று அதிரடியாக கூறினார். இதையடுத்து அம்மா மினி கிளினிக் தொடர்பான விவாதம் வைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், சுடுகாடு, கழிவறையில் கூட அம்மா மினி கிளிக்குகள் உள்ளன. அந்த திட்டம் தற்காலிகமானது மட்டுமே என்றார்.அதற்கு, வேண்டுமென்றே அம்மா மினி கிளினிக்குகள் குறித்து அவதூறாக பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்கள் கட்சி சார்பில் யாராவது வந்தால் ஆதாரத்துடன் நேரில் அழைத்து சென்று காட்டுவார் என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய முதல்வர், ஊராட்சிகளில் சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் அம்மா கிளினிக் திட்டம் தேவையில்லை.

அம்மா கிளினிக் செயல்படாதது பழிவாங்கும் நோக்கம் அல்ல அரசின் கொள்கை முடிவு என்று குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தொடங்கியது. இதையடுத்து நடந்த சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், இரண்டு நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று (ஜனவரி 6) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கவுள்ளார். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இத்தகைய முடிவை அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |