பிரதமர் மோடி பஞ்சாப் வருகிறார் என்று எஸ்பி கூறியதை அவர் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தோம் என விவசாயிகள் தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸும், பாஜகவும், மத்திய அரசும், பஞ்சாப் மாநில அரசும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் வருகையின்போது போராட்டம் நடத்திய பாரதிய கிசான் சங்கத்தின் பஞ்சாப் மாநில தலைவர் சுர்ஜித் சிங் பூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரோஸ்பூர் மாவட்ட சீனியர் எஸ்பி எங்களிடம் சாலையை விட்டு விலகுமாறும், இந்தப் பக்கம் பிரதமர் வருகிறார் என்றும் கூறினார். ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை, ஏதோ உளறுகிறார் என்று நினைத்தோம்” என்று கூறியுள்ளார்.
பெரோஸ்பூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் போவதாகத்தான் முதலில் மோடி திட்டமிட்டிருந்தார் . ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால் அவர் காரில் சென்றார். ஆனால் விவசாயிகள் போராட்டத்தால் பிரதமரின் வாகனம் தடைபட்டது. பாலம் ஒன்றில் கால் மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் காரில் காக்க வேண்டி வந்தது. இதையடுத்து தனது பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமர் விமான நிலையம் திரும்பினார்.இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி வார்த்தைப் போரிலும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்பி சொன்னதை அவர் ஏதோ உளறுகிறார் என்று விவசாயிகள் தலைவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.