நடிகை மீனாவின் மகள் மற்றும் கணவர் உட்பட அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை மீனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மீனா தன்னுடைய பதிவில், ‘2022 ஆம் ஆண்டில் எனது வீட்டிற்கு வந்த முதல் விருந்தாளி கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் குடும்பத்துடன் மீனா பூரண குணமடைந்து வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் லண்டன் சென்ற நடிகர் வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.