ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் டி பிளாக்கில் உள்ள 28 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் கட்டிடத்தின் தரம் மற்றும் மண் வளம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகு மீட்கப்பட்ட சிலிண்டர், பீரோ, நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.
அந்த கட்டிடத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழும் நிலையில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் தி.மு.க கவுன்சிலர் தி.மு தனியரசு, குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது.