பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பெண்ணை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அவரது குடும்ப நண்பர்களான கார்த்திக், விமல் ராஜ் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அந்த பெண்ணின் கை, கால்களை வாலிபர்கள் பெல்டால் கட்டியுள்ளனர். அதன்பிறகு இருவரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து நிர்வாண நிலையில் அந்த இளம்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு இருவரும் தப்பி சென்றனர்.
அதன் பின் கட்டுகளை அவிழ்த்து விட்டு வீட்டிற்கு சென்ற இளம்பெண் நடந்தவற்றை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் பொள்ளாச்சி மேற்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி மையம் மூலமாக நிவாரண தொகையை பெற்று கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.