தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாநகர் பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரண்டப்பள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோசின் ஜான் என்ற மகள் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மோசின் ஜான் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பாஷா இந்த வயதில் காதலிக்க வேண்டாம் என்று கூறி தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பாஷா தனது மனைவி மற்றும் மகளிடம் கோபித்துக் கொண்டு தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நூர்ஜஹானும், மோசின் ஜானும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் மகளின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.