இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா கிளினிக் திட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அம்மா கிளினிக் விரைவில் மூடப்படும்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மற்றும் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு அம்மா இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு விரைவில் மானியத்தை வழங்க வேண்டும். அதேபோல் அம்மா உணவகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் குறுக்கிட்டு பேசிய முன்னவர் துரைமுருகன் “கலைஞர் பெயரில் இருந்த எத்தனை திட்டங்களை நீங்கள் மூடினீர்கள் ? அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன ? என்று கூறினார்.
அதேபோல் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது மூடப்பட்ட திமுக திட்டங்கள் குறித்தும் வரிசையாக பட்டியலிட்டார். இதனால் கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி “அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான பாவத்தை அனுபவிப்பீர்கள்” என்று கூறினார். அப்போது கோபத்துடன் எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் தற்போது ஆட்சியை இழந்துள்ளீர்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.