மாற்றுத்திறனாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அம்புரோஸ் கிடைக்காததால் அவர்கள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் கடைசியாக தாம்போதி ஓடையில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஓடைக்கு அருகில் இருக்கும் முட்புதருக்குள் அழுகிய நிலையில் கடந்த அம்புரோஸின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.