உலகின் பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்றவாறு வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயணம் தொடங்குவதற்கு முன்னதாக சுய உறுதி விவரங்களை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 14 தினங்களில் மேற்கொண்ட அனைத்து பயண விவரங்களையும் குறிப்பிட வேண்டும். 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா அதிக ஆபத்து பட்டியலிலுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பாக விவரங்கள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
அவர்களுக்கு பயணம் முடிந்த பின் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளப்படும். ஆகவே ஏர் சுவிதா இணையத்தில் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பயணிகளை மட்டுமே விமான நிறுவனங்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அனைத்து பயணிகளும் தங்களுடைய மொபைலில் ஆரோக்ய சேது ஆப் வைத்திருப்பது அவசியம் ஆகும். பயணத்தின்போது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். விமானப் பயணம் முடிந்த பின் போதிய இடைவெளி விட்டு பயணிகள் வெளியேற வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்த சுய உறுதி விவரங்கள் குறித்த ஆவணத்தை காட்ட வேண்டும். விமான நிலையத்தில் வைத்து கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்று தனிமைப்படுத்த வேண்டும். அப்போது பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். ஆபத்து நிறைந்த பட்டியலிலிள்ள நாடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், பயணம் முடிந்ததும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதன் முடிவுகள் வரும் வரையிலும் வெளியேறக் கூடாது. இதற்கிடையில் கொரோனா நெகடிவ் வந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8வது நாளில் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அடுத்தடுத்து செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 8-வது நாள் பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் என்று வந்தால் அடுத்த 7 நாட்கள் தங்களை சுய கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். அதேநேரம் முடிவுகள் பாசிடிவ் என வந்தால் அவர்களது மாதிரிகள் INSACOG ஆய்வக நெட்வொர்க்கில் ஜீனோமிக் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதேபோன்ற நடைமுறை மற்ற நாடுகளிலிருந்து இந்தியா திரும்புவோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது