நெல்லை டவுண் காவல்துறையினர் கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்காளர்களை வாக்களிக்க பணம் வாங்குமாறு தூண்டினார் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரேமலதா இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசியதாக கூறி காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே இந்த வழக்கினை விசாரிக்க தடைவிதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் பேசவில்லை. வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், பணத்தின் வலிமையை காட்டும் விதமாகவும் தான் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறி வழக்கினை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.