சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஜனவரியில் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அவர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கினர்.
ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புழுவுடன் உள்ள அரிசி, வெல்லம் என்ற பெயரில் பிசின் போன்ற பொருட்களை அடைத்து கொடுக்கப்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனக் கூறினார்.இதற்கு பதிலாக பண்டிகை கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருந்தால் அது பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா அங்கு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்துள்ளார்.இதனால், சசிகலா மீது மோசடி, வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதியுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. .