பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு, எஸ்.சி., காலனியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் சாதிக் பாஷா வேலை முடிந்ததும் நிறுவனத்தை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை பனியன் நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் நிறுவனத்திலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.