அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் 6 மாதத்தில் 40 கிலோ எடையை குறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வலது கரமாக விளங்கியவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மைக் பாம்பியோ ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் அனைவரும் கொழுகொழுவென இருந்த பாம்பியோ எப்படி ஸ்லிம்மாக மாறினார் ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாம்பியோ தனது எடையை குறைத்தது தொடர்பில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு பாம்பியோ தற்செயலாக உடல் எடையை அளவிட்டு பார்த்தபோது இயந்திரத்தில் 136 கிலோ காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாம்பியோ எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். பின்னர் எலிப்டிகல் மெஷின் ஒன்றையும், டம்பல்ஸ்கள் சிலவற்றையும் வாங்கி வீட்டை ஜிம் போல் மாற்றி தினமும் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் உணவிற்கு சில கட்டுப்பாடுகளையும் வகுத்து அதனை கடைபிடித்து வந்துள்ளார். இந்த முயற்சி நாளடைவில் அவருக்கு பலனை கொடுக்கவே தற்போது பாம்பியோ 96 கிலோவாக மாறியுள்ளார். அதாவது பாம்பியோ கிட்டத்தட்ட ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அதேபோல் பாம்பியோ ஒரு நாளைக்கு 30 நிமிடம் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்வாராம். ஆனால் அவர் எந்த ஒரு பயிற்சியாளரையும் உதவி கேட்டு நாடவில்லை.