கஜகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டில் மக்கள் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டு தள்ள உத்தரவிட்டு கலவரத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
அந்த வகையில் இதுவரை ஆர்ப்பாட்டத்தில் மக்கள், காவல்துறையினர் என பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் நான்கு பேருடைய தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுததாரிகள் 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 3000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை மற்றும் தேசியப்படை என அதிகாரிகளில் 18 பேர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதியின் இந்த மோசமான நடவடிக்கைக்கு ஐரோப்பியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சுமுகமாக பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருமாறும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.