சூளகிரி அருகே உள்ள புலியரசி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த ஆறு பேர் அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அப்போது அந்தக் காரை பொது மக்கள் விரட்டிச் சென்றனர். இதில் மாணவியை இறக்கிவிட்டுவிட்டு, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மாணவியைக் கடத்த பெங்களூருவைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் (25) மற்றும் அவரது கூட்டாளிகள் வந்தது தெரிய வந்தது.
கார்த்திக்கின் பாட்டி வீடு, சூளகிரி அருகே புலியரசியில் உள்ளது. அவர் அடிக்கடி புலியரசிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது மாணவியை பார்த்த அவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். மேலும் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.
அப்போது மாணவியின் பெற்றோர், தற்போது மாணவியை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாணவியை கடத்தத் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவி கொடுத்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி கார்த்திக், அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.