2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சூழலில், அக்ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில், நீதிபதி பாப்டே இவ்வழக்கில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அதன்படி குற்றவாளி அக்ஷய் குமார் தரப்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை தொடங்கியது. அப்போது 4 குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக் கோரி வழக்கறிஞர் சஞ்சீவ்குமார் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டது. அக்ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங் தரப்பின் வாதத்தின் போது, அக்சய் குமார் அப்பாவி, எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு பெரிதாக்கபட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக அரசு தூக்கிலிட முயற்சிக்கிறது. ஊடகம், மக்கள், அரசியல் அழுத்தம் காரணமாக அக்சய்குமார் குற்றவாளியாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் கூட தூக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ஏன் அக்சய குமார் தூக்கிலிட பட வேண்டும் எனவும் வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் மதியம் 1 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அக்சய் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.