பாதயாத்திரையாக சென்ற சகோதரர்கள் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடுக்காய்குளம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன், முத்துராஜ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முத்துராஜ், பாலமுருகன் உள்பட 22 பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முத்துராஜ், பாலமுருகன் ஆகியோர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அண்ணன், தம்பி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகோதரர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.