தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மில்லர்புரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான கமலக்கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கமலக்கண்ணன் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கமலக்கண்ணனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த ரூ.2,230 ரூபாய் பணத்தையும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.