திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்தை சோதனையிட்டனர். ஆனால், ஆலை உரிமையாளர் தனது மகளின் பிறந்தநாளையொட்டி விருந்து நடைபெறுவதாகவும் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற விருந்து நடக்கக்கூடாது என அறிவுறுத்தி அலுவலர்கள் உடனடியாக விருந்தை நிறுத்த உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.