5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..
இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தது.. தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள கள நிலவரம் என்ன? என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு 5 மாநில சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்திருந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது..
இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தேர்தல் தேதியை அறிவித்தார்.. அவர் பேசியதாவது, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் டிசம்பர் இறுதியில் இருந்து தேர்தல் ஆணைய குழு ஆய்வு செய்தது. பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டு கள ஆய்வு அடிப்படையில் தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. கொரோனா, ஒமைக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது. கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தேர்தல் நடத்தப்படும்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2.16 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. 5 மாநிலங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு 24.9 லட்சமாக உள்ளது. 5 மாநில சட்டப் பேரவைகளின் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றார்.
மேலும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்குகளை செலுத்தலாம். கொரோனா காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் 1,250 பேர் வரை மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட எதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதை எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது.. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும்
5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,ஐந்து மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதியும், பிப்ரவரி 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 20ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 23ஆம் தேதி 4ஆம் கட்ட வாக்குப்பதிவும், 27ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றார்..
மேலும் மணிப்பூரில் பிப்ரவரி 27, மார்ச் 3 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார்.. 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்..