மர்ம நபர்கள் பெண்ணின் மீது ஆசிட்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்டாலின்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ராதா கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அம்மன்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் ராதா அப்பகுதியில் இருக்கும் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் ராதாவின் மீது ஆசிட்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த ராதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு ராதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.