சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை ரயிலில் ஏற்றி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சிறப்பு அதிரடி குழு நாட்டறம்பள்ளி உள்பட 4 பகுதிகளிலும், ரயில் நிலையங்களிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக சோமநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருக்கும் போது காவல்துறையினர் திடீர் சோதனை செய்ததில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் அங்கு இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.