மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருமொழி கிராமத்தில் புலி குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 26 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவரின் மகன்களான அன்புசெல்வம் மற்றும் சித்திக்ராஜ் ஆகியோரை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அன்புசெல்வம் மற்றும் சித்திக்ராஜ் இருவரையும் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.