மகன் துரத்தி விட்டதால் மனமுடைந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள சுப்பையாபுரம் பகுதியில் செல்லமாயி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனையடுத்து திடீரென மூதாட்டி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மூதாட்டியை அமரவைத்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் எனது மகன் என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு, என்னை பராமரிக்காமல் வீட்டிலிருந்து துரத்தி விட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் மூதாட்டியுடன் அறிவுரை கூறி கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.