தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 10,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.