தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வ வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் என 10,75,000 பேரை பட்டியலிட்டுள்ளது. அவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 2 தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணை நோய் பாதிப்பு கொண்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரம் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து எந்த விதமான சான்றும் இல்லாமல் ஆதார் அட்டை மட்டுமே காண்பித்து தடுப்பூசி மையங்களில் வருகிற 10-ஆம் தேதி முதல் இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.