பாஜகவினர் ஆட்டிற்கு காங்கிரஸ் பெயரைச் சூட்டி அதனை கோயிலில் வெட்டி பலி கொடுத்து தொடர்ந்து சமைத்தும் சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் தடைபட்டதை தொடர்ந்து அவருடைய தொண்டர்கள் அவருக்கு கோயில்களில் பல வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசைக் கண்டிக்கும் வகையில் மதுரை பாண்டி கோவிலில் ஆடு ஒன்றுக்கு காங்கிரஸ் பெயரை சூட்டி அதனை பலிகொடுத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞா் அணி மாநிலச் செயலா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். பாஜகவினா் பலி கொடுத்த ஆட்டின் தலையில் இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற வாசகம் மற்றும் கை சின்னம் அச்சிடப்பட்ட பதாகை கட்டப்பட்டு இருந்தது.
நமது நாட்டின் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவில் எங்கும் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இவ்வாறு ஆட்டின் தலையில் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பதாகையாக வைத்து, வெட்டியதாக அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சங்கரபாண்டியன் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக இளைஞா் அணியை சோ்ந்த பிரவீண், நீலமேகம், ராஜேஷ்குமாா், பட்டியலின அணி மாநில நிா்வாகி சிவாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
மேலும் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பூட்டப்பட்டு இருந்த கோயிலுக்கு வெளியே சூடம் ஏற்றி பாஜகவினா் வழிபாடு நடத்தினர்.