தமிழகத்தில் ஆன்லைன் முறைக்கு மாறாத முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையிலான நடவடிக்கையை பதிவுத்துறை தொடங்கியுள்ளது. பத்திரப்பதிவு பணிகளுக்காக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. அந்த அலுவலகங்களை சார்ந்து ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தகுதி அடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடன் பதிவுத்துறை உரிமம் வழங்கி வருகின்றது.
அவ்வகையில் கடந்த ஆண்டு வரை புதிய உரிமம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பதிவுத் துறை பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறி உள்ளதால் முத்திரைத்தாள் விற்பனையாளர்களும் அதற்கு ஏற்றவாறு தங்கள் பணிகளை முறைப்படுத்த வேண்டும். அதன்படி பதிவு துறை இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து, லாக் இன் குறியீடுகளை பெற வேண்டும். அதனால் பதிவுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முத்திரைத்தாள் குறித்த விவரங்களும் ஆன்லைன் திட்ட இணைய தளத்தில் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
இதன் மூலமாக மோசடிகளை தடுக்கலாம். ஆனால் பெரும்பாலான முத்திரைத்தாள் விற்பனையாளர் ஆன்லைன் முறைக்கு மாறாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சார்பதிவாளர் அலுவலகம் வாரியாக ஆன்லைன் முறைக்கு மாறிய, மாறாத முத்திரைத்தாள் விற்பனையாளர் குறித்த விவரங்களை பதிவு துறை திரட்டி வருகின்றது. அதன்பிறகு ஆன்லைன் முறைக்கு மாறாமல் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.