காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, பாஜக, நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து விமர்சித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு, தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் பேசியபோது, “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி, அவரின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் ஒன்றிணைந்திருக்கிறது.
ஆனால் பாஜக மட்டும் நீட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. பாஜக, தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது மற்றொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. தமிழ் மண்ணில் எப்போதும் தமிழருக்கு விரோதமான பாஜகவை நிலைநாட்ட அனுமதிக்கவே கூடாது” என்று வலியுறுத்தி இருக்கிறார்.